கர்த்தாவே, பலவீனர்களுக்கு உதவ உம்மைப்போல் ஒருவரும் இல்லையே – 2 CHRONICLES 14:11

பரிசுத்த வேதாகமத்தின் வசனங்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஒப்பிட்டு பார்த்து புரிந்து கொள்வது உற்சாகமூட்டும் அனுபவமாகவே உள்ளது. மேலும் தேவனுடைய வார்த்தையை துல்லியமாகவும் புரிந்துகொள்ள முடிகிறது.

பிரபலமான ஒரு பாடலின் வரிகள் இப்படி அமைந்துள்ளது. “பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன் யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்.”

2 நாளாகமம் 14ம் அதிகாரம் 11ம் வசனமும் அதே வகையான அர்த்தத்தை தான் கொடுக்கிறது என்பதை கீழ்கண்ட மொழிபெயர்ப்புகளில் காணலாம்.

GNT: O Lord, you can help a weak army as easily as a powerful one.

TA-OV-BSI: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது உமக்கு லேசான காரியம்;

KJV: Lord, it is nothing with thee to help, whether with many, or with them that have no power.

ஆனால், வேறு சில மொழிபெயர்ப்புகள் நம்மை சிந்திக்க தூண்டுகின்றன.

NIV: Lord, there is no one like you to help the powerless against the mighty.

ERV-TA : கர்த்தாவே, பலமானவர்களை எதிர்க்கும் பலவீனர்களுக்கு உதவ உம்மால் தான் முடியும்!

GW: Lord, there is no one except you who can help those who are not strong so that they can fight against a large army.

ஆசா என்ற ராஜா தன்னிடம் உள்ள 5 இலட்சம் 80 ஆயிரம் வீரர்களை கொண்டு 10 இலட்சம் வீரர்களை எதிர்க்க வேண்டும் மற்றும் கேடயங்களையும், ஈட்டிகளையும், வில்லம்புகளையும் கொண்டு 300 இரதங்களை எதிர்க்க வேண்டும். இப்படிப்பட்ட பலவீனமான சேனையை கொண்டு பலமுள்ள சேனையை எதிர்க்க வேண்டிய சூழ்நிலையில் பலமுள்ளவனுக்கு உதவி செய்கிறது உமக்கு லேசான காரியம்என்று ஆசா ராஜா விண்ணப்பம் பண்ணியிருக்க முடியாது.

ஆகவே, இந்த சூழ்நிலையில், கர்த்தாவே, பலமானவர்களை எதிர்க்கும் பலவீனர்களுக்கு உதவ உம்மைப்போல் வேறு ஒருவரும் இல்லையே என்று தான் ஆசா ராஜா விண்ணப்பம் பண்ணியிருக்க வேண்டும்.

ஆசாவின் விண்ணப்பத்தை கேட்டு பலமானவர்களை முறியடிக்க பலவீனர்களுக்கு கர்த்தர் உதவி செய்தார். ஆமென்.