மோவாபியர், அம்மோனியர் மற்றும் மியூனியர் ஆகிய மூன்று ராஜ்ஜியங்களின் சேனைகள் திரள் கூட்டமாக, யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தை எதிர்த்து யுத்தம் பண்ண வந்து கொண்டிருக்கிறது என்ற செய்தி யோசபாத்திறகு அறிவிக்கப்பட்ட போது, அவன் மிகவும் பயந்து கலங்கினான்.
அப்பொழுது யோசபாத் கர்த்தரிடத்திலே சகாயந்தேட உபவாசத்தைக் கூறுவித்து,
எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது, என்று முறையிட்டான்.
அப்பொழுது சபையின் நடுவிலிருக்கிற ஆசாப்பின் புத்திரரில் ஒருவனான லேவியன் மேல் கர்த்தருடைய ஆவி இறங்கினதினால் அவன் சொன்னது:
நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது.
இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்து நின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள; கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றான்.
பின்பு யோசபாத், ஜனத்தோடே ஆலோசனைபண்ணி, பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான்.
அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், (மியூனியர்) சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.
வெற்றி பெற்ற பின், கூட்டணியில் உள்ள மற்ற அணியின் ராணுவத்தினரை கொன்று, அனைத்து கொள்ளை பொருட்களையும் தாங்களே அபகரிக்க திட்டமிடுகின்றனர் என்று ஒருவருக்கு விரோதமாய் ஒருவர் சந்தேகப்படும் எண்ணங்களை [suspecting betrayal] கர்த்தர் எழும்பப்பண்ணினதினால், இப்பொழுதே நாம் அவர்களை அழிக்க வேண்டும் என்று, ஒருவரை ஒருவர் தாக்கி அழித்தார்கள். [Ref: AMP]
யூதா மனுஷர் வனாந்தரத்திலுள்ள சாமக்கூட்டண்டையிலே வந்து, அந்த ஏராளமான கூட்டமிருக்கும் திக்கை நோக்குகிறபோது, இதோ, அவர்கள் தரையிலே விழுந்துகிடக்கிற பிரேதங்களாகக் கண்டார்கள்; ஒருவரும் தப்பவில்லை.
யோசபாத்தும் அவனுடைய ஜனங்களும் அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிட வந்தபோது, அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும் பிரேதங்களிலிருந்து உரிந்துபோட்ட ஆடை ஆபரணங்களும், தாங்கள் எடுத்துக்கொண்டு போகக்கூடாதிருந்தது; மூன்று நாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது.
கர்த்தர் இஸ்ரவேலின் சத்துருக்களோடு யுத்தம்பண்ணினார் என்று கேள்விப்பட்ட அந்தந்த தேசத்து ராஜ்யத்தார்மேல் தேவனால் உண்டான பயங்கரம் வந்தது.
எங்கள் தேவனே, எங்களுக்குப் பெலனில்லை; செய்யவேண்டியது இன்னதென்றும் தெரியவில்லை; எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது, என்று முறையிட்ட யோசபாத் மற்றும் யூதா ஜனத்தின் முடிவு என்ன?
-
யூதாவை எதிர்த்து யுத்தம் பண்ண வந்த ஏராளமான கூட்டம் தரையிலே பிரேதங்களாக விழுந்து கிடக்கிறதை கண்டார்கள்.
-
யோசபாத்தும் அவனுடைய ஜனங்களும், சத்துருக்களின் உடைமைகளை மூன்று நாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது.
-
கர்த்தர் இஸ்ரவேலின் சத்துருக்களோடு யுத்தம்பண்ணினார் என்று கேள்விப்பட்ட அந்தந்த தேசத்து ராஜ்யத்தார்மேல் (இதற்கு மேல் என்ன நடக்குமோ என்று) தேவனால் உண்டான பயங்கரம் வந்தது.
– – – – – – – – – – – – –